தினம் ஒரு பாசுரம் -78
தினம் ஒரு பாசுரம் -78
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
-- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
இப்பாசுரத்தில் தொடங்கும் திருவாய்மொழிப் பதிகத்தை தினம் ஒதுமாறு இன்று ஒரு ட்வீட் இட்டேன். நண்பர்கள் சிலர் பொருளும், பலனும் கேட்க, பல வாரங்களுக்குப் பின் “தினம் ஒரு பாசுரம்” இடுகை இட ஒரு உந்துதல் கிட்டியது. முதலில் நேர்ப்பொருள், பின் பாசுரக்குறிப்புகள்.
பொருளுரை:
கற்பார் - கற்க எண்ணுபவர்கள்
இராமபிரானை அல்லால் - (சக்கரவர்த்தித் திருமகன்) இராமனின் பண்பையும் மாண்பையும் விடுத்து
மற்றும் கற்பரோ? - வேறொன்றை கற்க நினைப்பார்களா? (மாட்டார்கள்!)
புற்பா முதலாப் - புல் இனங்கள் தொடங்கி
புல் எறும்பு ஆதி - (சிறிய அளவில் இருக்கும்)அற்பமான எறும்பு, சிற்றுயிர் ஆகியவையோடு
நற்பால் அயோத்தியில் வாழும்- நல்லொழுக்கம் சிறந்து ஒங்கும் அயோத்தி மாநகரில் வாழ்கிற
சராசரம் முற்றவும் - (இன்ன பிற) உயிரினங்கள், மாந்தர் வரையிலும்
ஒன்று இன்றியே - (அவை, அவர்கள்) எவ்வித முயற்சியும் செய்யாத போதிலும்
நற்பாலுக்கு உய்த்தனன் - நற்தன்மைகளுடன்/குணங்களுடனும் விளங்கும்படிச் (இராமன்) செய்தனன்
நான்முகனார் பெற்ற நாட்டுளே - பிரமன் படைத்த இந்த பூவுலகத்து (வாழ்விலே)!
பாசுரக் குறிப்புகள்:
திருமால், இறைத்தன்மையை விடுத்து சாதாரண மனிதனாக எடுத்த அவதாரம் இராமாவதாரம். ஒரு மனிதனாக வாழ்ந்ததால் சில தவறுகள் ஏற்பட்டிருப்பினும், இராமபிரான், தன் பூவுலக இருத்தலில், உலக மாந்தர்க்கு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டினான். அத்தகைய இராம அண்ணலின் குண கீர்த்தியை நம்மாழ்வார் இப்பாசுரத்தில் அருளியிருக்கிறார்! இராமன் நல்லொழுக்கம், வீரம் ஆகியவற்றில் சிறந்தவனாக இருந்தாலும், அவனது கருணைக் குணமே தலை சிறந்ததாக இருந்தது.
அவன் வனவாசம் சென்றவுடன், அவன் பிரிவால், அயோத்தியில் இருந்த மரங்கள், செடி கொடிகள் கூட துயருற்று, இலை உலர்ந்து/உதிர்ந்து, மலர் வாடிக் காணப்பட்டனவாம். குளம், குட்டை, ஆறுகளில் நீர் கொதிப்படைந்ததாம். பாசுரத்தில் “கற்பார்” என்பதற்கு “சான்றோர்” எனவும் பொருள் கொள்ளலாம். ஆக, சான்றோரே, இராமனைக் கற்பதை தலையாய ஒன்றாக நினைக்கையில், நம் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன் - ஆழ்வார் ஆணித்தரமாக அருள்கிறார்! இராமபிரான் ஆனவன், தன் இருப்பால், அனைத்து அயோத்தி வாழ் உயிரினங்களையும் நற்பண்பு மிக்கவையாக வைத்திருந்தான் என்கிறார். அத்தகைய குணப்பெருந்தகையாக இராமன் இருந்தான். இதில் இன்னொரு செய்தி இருப்பதாகவும் கொள்ளலாம். பரந்தாமன், தன் விருப்பத்தின் பேரில், அடியார் என அவன் நினைக்கும் எவரையும் தடுத்தாட்கொண்டு, பரமபதம் எனும் பெருவாழ்வை அருள வல்லவன்!
தினம் ஒரு பாசுரம்-72 ஐ நினைவு கூர்கிறேன். குலசேகரப் பெருமாள் தன் பாசுரத்தில், இராமவதாரம் முடிவுற்று திருமால், கம்பீரமாக வைகுந்தம் எழுந்தருளிய காலத்தில், அயோத்தி வாழ் சராசரங்கள் எல்லாவற்றுக்கும் பரமபத பதவி அருளினான் என்று பாடுகிறார். இராமபிரான் கருணை வள்ளல், பரம தயாளன்!
இப்பாசுரத்தில் ஆரம்பிக்கும் பதிகத்தை தினம் ஓதினால், தீராப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பர். இராமனே பல இன்னல்களை சந்தித்தவன் என்பதால் அடியவரின் துயர் புரிந்து அதை சிக்கெனக் களைவான் என்று சொல்லலாம் தானே :-) இப்பதிகத்தை உரைப்பதால், தீர்வு என்பதை விட பிரச்சினைகளை எதிர்கொள்ள மனத்தெளிவும், வலிமையும் மிகும். ஆழ்வாரே சொல்லும் செய்தி தான் இது. பதிகத்தின் கடைப்பாசுரத்தில், “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு” என்று தொடங்கி “தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுலகத்துள்ளே” என்று நிறைவு செய்கிறார்.
--- எ.அ.பாலா
2 மறுமொழிகள்:
இந்தப் பாசுரத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. பல வளங்களுடன் வாழிய நீர் பல்லாண்டு.
amas32
//பல வளங்களுடன் வாழிய நீர் பல்லாண்டு.//
நன்றி. எனக்கு வளம் என்பது, தொடர்ந்து ஆழ்வார், ஆச்சார்யர்களை அனுபவிக்கும் பேறு அமைவது, என் மகள்கள் கற்றலில் மேன்மை அடைவது என்ற 2 மட்டுமே.
Post a Comment